ஈரானுடன் உள்ள மோதல் இன்னும் முடிவடையவில்லை என்றும், தேவையெனில் மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

தகவலின்படி, ஈரான்–இஸ்ரேல் இடையே கடந்த ஏப்ரலில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் அமெரிக்கா–ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் உருவானதாக கூறப்படுகிறது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும், இதனால் பிராந்திய பதற்றம் மீண்டும் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹட்செரிம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற இஸ்ரேலிய விமானப்படை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். சமீபத்திய இரண்டு ராணுவ நடவடிக்கைகளால் ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், ஏமன் முதல் ஈரான் வரை விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தும் திறனை இஸ்ரேல் ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை; அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் டெல் அவிவ் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என்ற நம்பிக்கையையும், இஸ்ரேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் ஈரான் அணு ஆயுதங்களை பெற்றிருக்கும் என்றும் அவர் கூறியதாக செய்தி தெரிவிக்கிறது.