ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், அரசு வேலை மற்றும் குடும்ப சொத்து தொடர்பான காரணங்களுக்காக தாயை கூலிப்படையால் கொலை செய்ய திட்டமிட்டதாக 23 வயது ஆயுஷி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் நீரஜ் சர்மா (45); இவர் நீதிமன்ற எழுத்தராக பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கூறுகையில், ஜூலை 3 அன்று நீரஜ் சர்மா தனது மகனை பயிற்சி மையத்தில் இறக்கிவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிய போது, அதிக வேகத்தில் வந்த ‘ஸ்கார்பியோ’ கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சுமார் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தபின், இது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என போலீசார் உறுதி செய்தனர். கடந்த ஆண்டு நீரஜின் கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் நீதிமன்ற எழுத்தர் பணியை ஆயுஷி கேட்டதாகவும், குடும்ப சூழல் காரணமாக அந்தப் பணியில் நீரஜ் சேர்ந்ததால் ஆயுஷி அதிருப்தியில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப சொத்து பிரிப்பு தொடர்பாக தாய்-மகள் இடையே தகராறு நீடித்ததாக போலீசார் தெரிவித்தனர். தாயை கொன்றால் அரசு பணியும் சொத்தும் தன்னிடம் வரும் என்ற எண்ணத்தில், ஆயுஷி தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப் மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து பரத்பூரைச் சேர்ந்த கூலிப்படைக்கு சுமார் ரூ.7 லட்சம் வழங்கி திட்டமிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. கூலிப்படையினர் ஒரு மாதமாக நீரஜின் தினசரி நடவடிக்கைகளை கண்காணித்து, இறுதியில் காரை ஏற்றி கொலை செய்ததாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் ஆயுஷி, மோகன் ஸ்வரூப் மற்றும் கூலிப்படையினர் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பால்ராம் என்ற மற்றொரு உறவினர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.