பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சி சார்ந்த எந்த செயல்பாடுகளும் நடைபெறக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டு, விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜயின் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாடிய விவகாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறினார். அதற்கு அரசு பதில் அளித்து, சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. உட்பட எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சி கொடி அல்லது கட்சி அடையாளங்களுடன் பள்ளிக்குள் செல்லாமல் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பள்ளிகளில் கட்சி சார்ந்த செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளதால், மீறுபவர்கள் மீது நடவடிக்கை உறுதி எனவும் கூறினார்.
ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) வினாத்தாள் கடினமாக இருந்ததாக கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முந்தைய தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பு முறை குறித்தும் தகவல் கேட்டுள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், தி.மு.க. ஆட்சியில் 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பள்ளிகள் மூடப்படக்கூடாது என்றும், மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக வந்த புகாரில் விசாரணை நடந்ததாகவும், ஆசிரியர்கள் வெளியே நிறுத்தவில்லை; தகவல் தொடர்பு பிரச்னைதான் எனவும் கூறினார். கல்விக் கட்டணம் நிலுவை போன்ற காரணங்களுக்காக தனியார் பள்ளிகள் மாணவர்களின் டி.சி.யை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.





