தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நீரிழிவு நோயாளிகளுக்காக, வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதுமான புதிய இன்சுலின் மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுமார் 10.1 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடலில் இன்சுலின் உற்பத்தி இல்லாத ‘டைப்-1’ நீரிழிவால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தினசரி இன்சுலின் ஊசி அவசியமாகிறது. தீவிர ‘டைப்-2’ நீரிழிவு நோயாளிகளுக்கும் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த தினசரி இன்சுலின் தேவைப்படும் நிலை உள்ளது.

தினசரி ஊசி போட வேண்டுமெனும் பயம் காரணமாக சிலர் இன்சுலின் சிகிச்சையை தொடங்குவதையே தாமதப்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வாரம் ஒருமுறை என்ற திட்டம், சிகிச்சையை தாமதமின்றி தொடங்கவும் தொடர்ந்து பின்பற்றவும் உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மருந்து ‘இன்சுலின் ஐகோடெக்’ (insulin icodec) ஆகும்; இதற்கு ‘அவிக்லி’ (Awiqli) என்ற பிராண்ட் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ‘பிளெக்ஸ்டச்’ (FlexTouch) என்ற பேனா வடிவ கருவி மூலம் இந்த இன்சுலின் செலுத்தப்படும்.

700 யூனிட் கொண்ட ஒரு பேக் விலை ரூ. 2,611 என்றும், ஒரு யூனிட் விலை ரூ. 3.73 என்றும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள தினசரி இன்சுலினுடன் ஒப்பிடுகையில் இது 30–40% வரை மலிவு என்றும், தினமும் 10 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு வாரத்திற்கு 70 யூனிட் போதுமானதால் வாரச் செலவு சுமார் ரூ. 261 ஆகும் என்றும் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.