தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்எல்ஏ சரவணன், புதுக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) மொத்த கிடங்கில் நடத்திய ஆய்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், மொபைல் போன்களில் பதிவு செய்யும் குழுவுடன் கிடங்கிற்கு சென்ற அவர், அத்தியாவசிய பொருட்கள் வரவு மற்றும் இருப்பு குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அரிசி உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்த அவர், அந்த வாகனத்தை ஆய்வு செய்தார்.

லாரியின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இருந்த பதிவு எண்கள் அழிக்கப்பட்டிருப்பதை கவனித்த அவர், டிரைவரிடம் விளக்கம் கேட்டபோது, தனக்கு தெரியாது என டிரைவர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் டயர்கள் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டி, வாகனத்தின் சட்டப்பூர்வ ஆவணங்கள், தகுதிச்சான்று, காப்பீடு உள்ளிட்டவை குறித்து சந்தேகம் எழுப்பினார்.

இதையடுத்து, லாரி ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பின்னால் பார்க்கும் கண்ணாடி இல்லாதது மற்றும் வாகன நிலை குறித்து கேள்வி எழுப்பினார். போக்குவரத்தில் காலதாமதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு எதிர்முனையில் பேசியதாக கூறப்படும் ஒப்பந்த நிறுவன மேனேஜர் முத்துராஜ், “இதையெல்லாம் கேட்க நீங்கள் யார்? கான்ட்ராக்ட் பற்றி பேசாதீர்கள்; தகவல் வேண்டுமெனில் அதிகாரியிடம் பேசுங்கள்” என கடுமையாக பதிலளித்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ, “நான் லைவில் இருக்கிறேன்; மீடியாவும் இருக்கிறது. லாரி விவரங்களை வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பியுள்ளேன்” என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மேனேஜர், சேஸ் நம்பரை ஆன்லைனில் சரிபார்க்க சொல்லி அழைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.