தமிழக சுற்றுலா துறை நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றின் மையமாக தமிழகம் தொடர்ந்து பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஜனவரி முதல் மே மாதம் வரை மொத்தம் 19.06 கோடி பேர் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இதில் 18.94 கோடி உள்நாட்டு பயணியரும், 11.33 லட்சம் வெளிநாட்டு பயணியரும் அடங்குவர் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.
சுற்றுலா தலங்களுக்கு ஆன்லைன் வழியில் முன்பதிவு செய்யும் வசதி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) மூலம் வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு தொகுப்பு சுற்றுலா திட்டங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டன. இதனால் உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதே வேகம் தொடர்ந்தால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 40 கோடி பயணியர் இலக்கை தமிழகம்தாண்டி புதிய சாதனை படைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தினசரி சராசரியாக 12.50 லட்சம் பேர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவதாகவும், மாதத்திற்கு சராசரியாக 2.26 லட்சம் சர்வதேச பயணிகள் வருவதாகவும் துறை தரப்பில் கூறப்பட்டது.





