பசலி ஆண்டு தொடங்கிய பிறகும் பல கோவில்களில் வழக்கமான டெண்டர்கள் விடப்படாததால், நித்தியபடி பூஜைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறநிலையத்துறையில் பசலி ஆண்டு ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை கணக்கிடப்படுகிறது. கோவில்களின் வரவு–செலவு மற்றும் டெண்டர் நடவடிக்கைகளும் இதே அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன. வழக்கமாக அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட தினசரி பூஜைகளுக்கான பூ, மாலை, தேங்காய், பழம் போன்ற பொருட்களுக்கு ஜூன் மாதத்திலேயே டெண்டர் விடப்பட்டு, ஜூலை முதல் வழங்கல் தொடங்கும்.

ஆனால் புதிய பசலி ஆண்டுக்கு முன் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ITCOT பரிந்துரைத்த நிபந்தனைகளின் அடிப்படையில் டெண்டர் கோர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து டெண்டர்களையும் இ-டெண்டர் முறையிலேயே நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், புதிய டெண்டர்கள் இன்னும் நிலுவையில் இருப்பதால் கோவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தரப்பில், டெண்டர்களில் முறைகேடு ஏற்படாமல் ITCOT நிபந்தனைகளுடன் டெண்டர் கோரப்படும் என்றும், அதுவரை நித்தியபடி பூஜைகள் பாதிக்காமல் தற்காலிகமாக பொருட்கள் வாங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நித்தியபடி பொருட்களின் விலை 20% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுவதால், அதே தொகைக்குள் வாங்கும் போது தணிக்கையில் சிக்கல் வருமோ என்ற அச்சம் கோவில் செயல் அலுவலர்களிடம் உள்ளது; சில இடங்களில் நன்கொடையாளர்களை நாட வேண்டிய நிலையும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதுநிலைக் கோவில்களில் காணிக்கையாக வரும் முடி, தேங்காய், எலுமிச்சம்பழ தோல், எள் விளக்குகள் போன்றவை டெண்டர் அடிப்படையில் அகற்றப்படுவது வழக்கம். இந்த பசலி ஆண்டில் டெண்டர் தாமதம் காரணமாக பல கோவில்களில் அவை அகற்றப்படாமல் இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதற்கு முன் அகற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் ரூ.5 லட்சம் வரை வழக்கமான டெண்டராகவும், அதற்கு மேல் இ-டெண்டராகவும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.