சென்னை: மாவட்ட அளவில் கட்டட அனுமதி விண்ணப்பங்களை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆய்வை வேகப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதிக்கு வெளியே கட்டட அனுமதி வழங்கும் பணிகள் நகர் மற்றும் ஊரமைப்பு துறை (டி.டி.சி.பி.) மூலம் மாவட்ட அலுவலகங்கள் வழியாக நடைபெறுகின்றன. இணையத்தில் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் இவ்வலுவலகங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன; ஆனால் ஆய்வு தாமதம் காரணமாக அனுமதி வழங்குவதும் தள்ளிப்போகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை சரிசெய்ய, விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் கட்டுமான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டி.டி.சி.பி. கமிஷனர் கிரன் குராலா அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 15 விதிமுறைகளையும், விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டிய ஏழு விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.
முக்கியமாக, விண்ணப்பம் வந்த முதல் வாரத்திலேயே சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; கள ஆய்வு அடிப்படையில் தேவையான விளக்கங்களை ஒரு வாரத்துக்குள் கேட்க வேண்டும்; நடைமுறைக்கு மாறாக புதிய பிரச்னைகளை உருவாக்கும் வகையில் கேள்விகள் எழுப்பக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட அலுவலகங்கள் கேட்கும் விளக்கங்களின் தரத்தை தலைமை அலுவலகம் ஆய்வு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே அனைத்து இணைப்பு ஆவணங்களையும் தர வேண்டும்; பொது கட்டட விதிகளுக்கு உட்பட்டது உறுதி செய்த பின் தான் வரைபடங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்; சம்பந்தப்பட்ட நிலத்தின் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள வளர்ச்சி பணிகளை காட்டும் நில அளவை வரைபடங்களை வழங்க வேண்டும்; முறையாக பதிவு செய்யப்பட்ட தொழில்முறை வல்லுநர்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேவையான விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டால், ஏழு நாட்களுக்கு பின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும் என எச்சரிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவில் இடம் பெற்றுள்ளது.





