அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தொடரப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு மற்றும் அவதூறு வழக்கில், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.55 கோடி இழப்பீட்டை உடனடியாக வழங்க நியூயார்க் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996-ல் மன்ஹட்டனில் உள்ள ஒரு ஆடம்பர ஆடை விற்பனையகத்தின் ஆடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கரோல் குற்றஞ்சாட்டினார். இதை டிரம்ப் பொய்யென கூறி பொதுவெளியில் விமர்சித்ததைத் தொடர்ந்து, கரோல் அவதூறு வழக்கையும் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 2023-ல் சிவில் நீதிமன்ற நடுவர் குழு டிரம்ப் பொறுப்பாளி என தீர்ப்பளித்து, சுமார் ரூ.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்ததால், அந்தத் தொகை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் டிரம்பின் மேல்முறையீட்டை நாட்டின் உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்ததால், கீழ்நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. வழக்கை பல ஆண்டுகளாக தாமதப்படுத்தியதாகக் குறிப்பிட்ட நீதிபதி, வட்டியுடன் சேர்த்து ரூ.55 கோடி தொகையை உடனடியாக கரோலுக்கு வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து டிரம்பின் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டதுடன், கரோலுக்கு பணம் வழங்குவதை தடுக்க முடியாது என மேல்முறையீட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.





