அதிமுகவில் கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என, இளைஞரணி நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இளைஞரணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி மாநில செயலரும் முன்னாள் எம்.பி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர்கள் கூறுகையில், இளைஞரணி செயல்பாடு பலவீனமடைந்துள்ளதாகவும், பல நிர்வாகிகள் தங்களின் ஆதங்கங்களை கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்ததாகவும் கூறினர். பதவிகளை பெற்றுவிட்டு பிற கட்சிகளுக்கு செல்லும் நபர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது; விசுவாசமாக இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் சட்டசபை தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை; பூத் கமிட்டிகளிலும் இளைஞரணியினர் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இதுவே தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததாக கூறிய அவர்கள், இனிமேல் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கருத்துகளை கட்சி தலைமையிடம் எடுத்துச் சொல்வதாக விஜயகுமார் தெரிவித்ததுடன், அதிகளவில் இளைஞர்களை கட்சியில் சேர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.





