பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி, பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டு வயது மகன் ஆத்விக்கை சேர்த்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் அவரது முடிவை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், விளையாட்டுடன் கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான சூழல் போன்ற வசதிகள் கொண்ட அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை மக்கள் முழுமையாக உணர வேண்டும் என்றார்.
மேலும், குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் 11 மாதங்களுக்கான பிரத்யேக பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார். குழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு அட்டையில் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் கூறினார்.
இத்தகைய சேவைகளை புரிந்து கொண்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.





