த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த இரண்டு டாக்டர்களை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கவும், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் முயற்சி நடந்ததாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மோகனூரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். அவருடன் காங்கேயத்தைச் சேர்ந்த ராஜசேகரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. விசாரணையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை முடிந்த பின்னர் டாக்டர் ரமேஷ்குமார் ஊருக்கு திரும்பினார். ஆனால் ராஜசேகர் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு போலீசார் உறுதிப்படுத்தவில்லை.