புதுடில்லி: 20% எத்தனால் கலந்த ‘இ-20’ பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களில் கோளாறு அல்லது சேதம் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் எழுந்த சந்தேகங்களுக்கு இது விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பது என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் 1 முதல் ‘இ-20’ பெட்ரோல் பயன்பாட்டை மத்திய அரசு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, எத்தனால் கலப்பு அதிகரிப்பதால் பழைய வாகன இன்ஜின்கள் பாதிக்கப்படலாம் என்றும், மைலேஜ் குறையலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இ-10’ விட ‘இ-20’ துாய்மையான, உயர்தரம் மற்றும் அதிக திறன் கொண்ட எரிபொருள் என்றும், பல ஆண்டுகளாக நடந்த அறிவியல் சோதனைகள், வாகன உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைகள் மற்றும் உள்நாட்டு எத்தனால் உற்பத்தி விரிவாக்கம் ஆகியவற்றுக்குப் பிறகே இது அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன் இன்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகளின் இணக்கத்தன்மை, அரிப்பு தடுப்பு திறன் மற்றும் ஓட்டும் வசதி போன்ற அம்சங்களில் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சில வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் 35% வரை குறையக்கூடும் என்றும் அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
அதேசமயம், அதிக ஆக்டேன் அளவு தேவையற்ற இன்ஜின் சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்க உதவும் என்றும், சிறந்த பிக்கப், சீரான வேகம் அதிகரிப்பு, துாய்மையான இன்ஜின் செயல்பாடு மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வு போன்ற நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தது. ‘இ-20’ பயன்படுத்துவதால் பாகங்களின் ஆயுட்காலம் குறைதல் அல்லது அசாதாரண தேய்மானம் போன்ற பாதிப்புகள் இல்லை என்று பிரபல வாகன உற்பத்தியாளர்கள் சான்றளித்துள்ளதாகவும், தவறான தகவல்களால் நுகர்வோர் குழப்பமடைய வேண்டாம் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டது.





