சட்டசபை தேர்தல் முடிவுகளின் செல்லுபடியாக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட பல தேர்தல் வழக்குகளில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்குகளை ஒத்திவைத்துள்ளது.
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல் கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராயபுரம் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் தாமு, குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.சந்திரன் மற்றும் புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. வி.முத்துராஜா ஆகியோரின் வெற்றிகளையும் எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஐந்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின், தளவாய் சுந்தரம், விஜய் தாமு உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் கரூர், விராலிமலை தொகுதிகளில் வெற்றி பெற்று பின்னர் பதவி விலகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர், லால்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்டின், திருக்கோவிலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பழனிசாமி, விழுப்புரம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணன் மற்றும் விக்கிரவாண்டி பா.ம.க. எம்.எல்.ஏ. சி.சிவகுமார் ஆகியோரின் வெற்றிகளை எதிர்த்த வழக்குகளிலும், நீதிபதி என்.செந்தில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
அந்தியூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பி.ஹரிபாஸ்கர், பழனி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ரவி மனோகரன், ஆவடி த.வெ.க. எம்.எல்.ஏ. ஆர்.ரமேஷ்குமார், திட்டக்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.கணேசன், கோவில்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி மற்றும் போளூர் த.வெ.க. எம்.எல்.ஏ. அபிஷேக் ஆகியோரின் வெற்றிகளை எதிர்த்த மனுக்களிலும், நீதிபதி டி.கோவிந்தராஜன் திலகவதி மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்குகளை ஒத்திவைத்தார்.





