மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை ஹைட்ரஜன் எரிபொருள் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார். தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும், பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி சார்பை குறைக்கவும் மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் துறைகளில் இந்தியா நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாகவும், தொழில்நுட்பம் மற்றும் செலவு அடிப்படையில் உலக அளவில் முன்னிலை பெற முடியும் என்றும் கட்கரி தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுதும் 10 வழித்தடங்களில் சோதனை நடத்தப்படுவதாக கூறினார்.
கிரேட்டர் நொய்டா–டில்லி–ஆக்ரா, புவனேஸ்வர்–கோனார்க்–புரி, ஆமதாபாத்–வதோதரா–சூரத், சாஹிபாபாத்–பரிதாபாத்–டில்லி, புனே–மும்பை, ஜாம்ஷெட்பூர்–கலிங்கா நகர், திருவனந்தபுரம்–கொச்சி, கொச்சி–எடப்பள்ளி, ஜாம்நகர்–ஆமதாபாத், விசாகப்பட்டினம்–பய்யாவரம் ஆகிய வழித்தடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதன் மூலம் தூய்மையான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.





