இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் “வரலாற்று மைல்கல்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் உறவுகளுக்கு புதிய வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
நியூசிலாந்து பயணத்தில் உள்ள மோடி, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஆக்லாந்தில் உள்ள அரசாங்க மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மோடி, கிடைத்த மரியாதைக்கு பெருமிதம் தெரிவித்தார். பாரம்பரிய மாவோரி ‘போவிரி’ சடங்கு, நியூசிலாந்தின் வளமான மரபுகளையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் தானாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்தியாவுக்கு நியூசிலாந்து மக்கள் காட்டும் பாசத்திற்கு நன்றி தெரிவித்தார்.





