கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவு தடையை நீக்குமாறு ஹிந்து சமய அறநிலையத் துறை (அறநிலையத்துறை) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அறநிலையத்துறை கமிஷனர் வினய், திருப்பூர் இணை கமிஷனருக்கு அனுப்பிய உத்தரவின் படி, புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களுடன் தொடர்புடைய 3,085 ஏக்கர் நிலங்கள் முதலில் கோவில் பெயரில் இருந்ததாகவும், பின்னர் தனிநபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகளால் “தவறுதலாக” பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டதாகவும், தற்போது வருவாய்த்துறை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தடையை நீக்கலாம் என கரூர் கலெக்டர் பரிந்துரைத்துள்ளதாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால் 3,390 பட்டாதாரர்கள் பயனடைவார்கள் என்றும், உடனடியாக தடை நீக்க நடவடிக்கை எடுக்க கோவில் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பா.ஜ., மற்றும் பல ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், இது கோவில் சொத்துகள் கைமாற உதவும் நடவடிக்கையென குற்றம்சாட்டினர். ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர் டி.ஆர். ரமேஷ், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் ஆகியோரும் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய நிலையில் இத்தகைய உத்தரவு சர்ச்சைக்குரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.