உஸ்பெகிஸ்தானில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சூழலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழா மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த்–மினி தம்பதியின் மகள் சாவர்யா உஸ்பெகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவைச் சேர்ந்த சாதருல் அனாம் (21) என்பவரும் மாணவராக இருந்ததாக கூறப்படுகிறது; இருவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர்.

ஜூலை 3-ம் தேதி சாவர்யா ‘லேப்டாப்’ மூலம் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக உஸ்பெகிஸ்தானுக்கு சென்றனர்.

விசாரணையில், சாவர்யாவை மதம் மாற வற்புறுத்தி தாக்கி கொன்றதாக தெரிய வந்ததாகவும், அந்நாட்டு போலீசார் சாதருல் அனாமை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல் விமானம் மூலம் ஆலப்புழாவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், அவரது வீட்டுத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், சாதருல் அனாம் மீது ஹரிப்பாடு காவல் நிலையத்தில் சாவர்யாவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.