துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த நேட்டோ அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு முடிவில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு பல தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையின்படி, மரத்தாலான பெட்டியில் பெறுநரின் பெயர் செதுக்கப்பட்ட ‘குமுசே 357 மேக்னம்’ ரக கைத் துப்பாக்கி வழங்கப்பட்டது. அதனுடன் ஆறு தோட்டாக்கள், துப்பாக்கி சுத்தம் செய்யும் கருவி மற்றும் துருக்கியின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கும் சான்றிதழும் இருந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கி இயங்கும் நிலையில் இருந்ததோடு தோட்டாக்களும் சேர்ந்து இருந்ததால், அதை சட்டப்படி மற்றும் பாதுகாப்பாக தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லுவது குறித்து அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், தன் நாட்டில் தரையிறங்கிய பின் பெட்டியை திறந்து பார்த்து உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே பரிசை பார்த்து, தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை துருக்கியில் உள்ள தங்கள் துாதரகங்களில் வைத்துவிட்டு வந்ததாக தகவல் தெரிவிக்கிறது.





