தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க தேசிய மருத்துவ கமிஷன் (என்எம்சி) ஒப்புதல் அளித்துள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 என மொத்தம் 100 கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் சேர்க்கை 100ல் இருந்து 150 ஆக உயர்கிறது.

இந்த கூடுதல் இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழும் தகுதி பெறுவதால், அந்த மாணவர்களுக்கும் பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டு மருத்துவ மதிப்பீடு மற்றும் தர மதிப்பீட்டு வாரியம் நாமக்கல் மற்றும் திருப்பூர் கல்லூரிகளுக்கு அனுமதி கடிதங்களை வழங்கியதாகவும், பின்னர் அவை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக 2021ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் இடங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன், கோவை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.