புதுடில்லி: உலகளவில் கடும் வெப்ப அலைகளால் அதிக ஆபத்தில் உள்ள நகரங்களைப் பற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில், தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை நகரங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உலக வெப்பநிலை உயர்ந்து வரும் சூழலில், 10 லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களில் வெப்ப அலை பாதிப்பு அபாயம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த முடிவுகள் Sustainable Cities and Society என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வின் படி, ஒரு நகரத்தின் வெப்ப அபாயத்தை நிர்ணயிப்பதில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகள் அதிகம் இருப்பது, பொருளாதார நிலை, உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு, குளிரூட்டும் வசதிகளுக்கான அணுகல், மரங்களின் அடர்த்தி போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உலகளவில் வெப்ப அலை ஆபத்து அதிகம் உள்ள நகரமாக ஈராகின் அல் பஸ்ரா முதலிடத்திலும், குஜராத்தின் ஆமதாபாத் இரண்டாம் இடத்திலும், மாலியின் பமாகோ மூன்றாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. மேலும், சென்னை, மதுரை உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் உலகின் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





