சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் பணியாற்றும் அரசியல் உதவியாளர்கள் ஆசைவார்த்தை காட்டியும் நெருக்கடி கொடுத்தும் வசூலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர்பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் ஆய்வு கூட்டங்கள், அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகளில் வெளிப்படையான, ஊழல்-லஞ்சமற்ற நிர்வாகம் வழங்குவோம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அமைச்சரவையில் பெரும்பாலானோர் புதியவர்கள்; பலர் எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. ஆனால், சில உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணமாக “தூய்மையான நிர்வாகம்” குறித்த எதிர்பார்ப்பில் சலனம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை செயலக வட்டாரங்கள் கூறுவதன்படி, சில உதவியாளர்கள் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர்களை பாதிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; அதற்குள் செட்டிலாகி விடுங்கள்” என கூறி தூண்டுவதாகவும், ஏழு சட்டசபை தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்வைத்து பிரசாரம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக பெரிய தொகை திரட்ட வேண்டும் என அழுத்தம் தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பணியிடமாற்றம், பதவி உயர்வு முதல் டெண்டர் வரை வசூல் பரவியுள்ளதாகவும், சில துறைகளில் மதிப்பீட்டு தொகை குறிப்பிடாமல் ஒப்பந்தங்கள் கோரப்படுவது இதற்கு வசதியாக இருக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வருக்கு தெரிந்தால் பிரச்னை ஆகும் என்ற அச்சம் சில அமைச்சர்களிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





