தி.மு.க. முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்டசபை ஓட்டெடுப்பில் தங்கள் விருப்பப்படி செயல்படுமாறு பேரம் பேசப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

முன்ஜாமின் மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை என குறிப்பிட்டார். எப்.ஐ.ஆரில், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தால் எம்.எல்.ஏ.-வுக்கு ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், தற்போதைய அரசை கவிழ்க்க முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், எனவே இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.25,000 சொந்த ஜாமினும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், தலைமறைவாகக் கூடாது; வழக்குத் தொடர்பான ஆதாரங்கள் அல்லது சாட்சிகளை கலைக்கக் கூடாது; நிபந்தனைகள் மீறப்பட்டால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.