உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி ஹனுமன்கர்ஹி கோவில் படிகளில் கடந்த காலத்தில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மீது இரட்டை நிலைப்பாடு கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு அனுமதி அளித்ததாக கூறப்படும் கட்சிகள் தற்போது சனாதன தர்மம் மற்றும் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்புவது சரியா என வினவினார். மேலும், “ஜமா மசூதிக்குள் சென்று யாராவது ஹனுமன் சாலிசா சொல்ல முடியுமா; அதை எந்த அரசாவது அனுமதிக்குமா?” என எதிர்க்கேள்வியும் எழுப்பினார்.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைவது ஒருகாலத்தில் கற்பனைக்கூட எட்டாதது என்றும், அந்த யோசனையை சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கேலி செய்ததாகவும் அவர் கூறினார். தற்போது விமான நிலையம் செயல்பாட்டில் இருப்பதுடன், அதற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதால் அக்கட்சி விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் நீண்டகால கோரிக்கையை பா.ஜ.க. நிறைவேற்றியதாக கூறிய யோகி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ராமரின் இருப்பு குறித்த ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க. நீண்டகாலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுப்படி, மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 2003-ல் ஹனுமன்கர்ஹி கோவில் படிகளில் ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அருகே இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னாள் டி.ஜி.பி. மற்றும் தற்போதைய பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் லால், அப்போது உள்ளூர் போலீசார் தலையிட்டு அனுமதி மறுத்ததாக கூறியிருந்ததை குறிப்பிட்டே யோகி இந்த கருத்துகளை தெரிவித்தார்.