கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ. அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஒரு வழக்கில் போலீஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பருய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பிரபாஸ் மோண்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் உடலை குளத்தில் வீசி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதான பிரபாஸை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று குற்றத்தை நடித்துக் காட்ட போலீசார் முயன்ற போது, அங்கேயே அவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவர் தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக மம்தா ஊர்வலம் சென்ற போது, ஊர்வலத்தின் மீது முட்டைகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் நடைமுறையில் உள்ளதாக கூறப்படும் “என்கவுண்டர்” அணுகுமுறையை மேற்கு வங்கிலும் சுவேந்து பின்பற்றுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், மம்தா ஆட்சிக்காலத்தில் நடந்த சில வன்கொடுமை வழக்குகளில் போலீஸ் செயல்பாடு குறித்து விவரங்களைத் தயாரித்து வருவதாகவும், இனி உ.பி. பாணியில் கடுமையான நடவடிக்கை இருக்கும் என சுவேந்து தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.