புதுடில்லி: அரசு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடும் அல்லது இசைக்கும் வரிசை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாநிலப் பாடலா, தேசியப் பாடலா, தேசிய கீதமா முதலில் என்ற குழப்பத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய கீதம் “ஜன கண மன”; தேசியப் பாடல் “வந்தே மாதரம்”. சில மாதங்களுக்கு முன், அரசு நிகழ்ச்சிகளில் இந்த இரண்டையும் கட்டாயமாக பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் “வந்தே மாதரம்” பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தேசியப் பாடலை பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும்; அதன் பின்னர் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும்; அதன் பிறகு “வந்தே மாதரம்”, பின்னர் “ஜன கண மன” என்ற வரிசையில் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலை இசைக்கும் போது அதிகாரப்பூர்வ வரிகள், உச்சரிப்பு மற்றும் இசை நயம் துல்லியமாகவும் தவறின்றியும் இருக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதை உறுதி செய்ய சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பு வழிமுறைகள் உள்துறை அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் இந்த புதிய வரிசையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் “தமிழ்த்தாய் வாழ்த்து” முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அரசியல் விவாதமாக இருந்து வருகிறது. மேலும், மே இறுதியில் பதவியேற்ற பின் முதன்முறையாக டில்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது இதே கோரிக்கையை முன்வைத்ததாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





