வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கருத்தரங்கில் காட்டப்பட்ட தவறான இந்திய வரைபடத்துக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த இந்திய துாதரக அதிகாரிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
“நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல், பிராந்திய ஒருங்கிணைப்பை புதுப்பித்தல்: சார்க் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்கான வழிகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், வங்கதேச வெளியுறவு இணை அமைச்சர் ஷாமா ஒபாய்ட், இந்தியாவுக்கான முன்னாள் வங்கதேச துாதர் அகமது தாரிக் கரீம், டாக்கா இந்திய துாதரகத்தின் இரண்டாம் செயலர் பூஜா குமாரி ஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரீம் தனது உரையின் போது சில விளக்கக் காட்சி படங்களை காட்டினார். அதில் இடம்பெற்ற இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் இந்தியப் பகுதியாக காட்டப்படாமல், பாகிஸ்தான் வரைபடத்தில் சேர்த்துக் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய பூஜா குமாரி ஜா, அது தவறான வரைபடம் என்றும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு கரீம், அந்த வரைபடம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், உண்மையான எல்லைகளை குறிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். அதற்கு பதிலளித்த ஜா, விளக்கத்தை புரிந்துகொள்ள முடியும் என்றாலும், ஜம்மு-காஷ்மீர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் தான் அதை குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. நிகழ்ச்சியில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதற்காக பூஜா குமாரி ஜாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





