உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மகேந்திரகிரி நேற்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
இந்த கப்பலை கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் வடிவமைத்தது. மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனம் இதை கட்டமைத்துள்ளது. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களின் கீழ், சுமார் 75% உள்நாட்டு மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து, கிழக்கு கடற்படை பிரிவில் இணைத்தார். கடற்கரைக்கு அருகே மட்டுமின்றி தொலைதூரம் மற்றும் ஆழ்கடல்களிலும் இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் கடற்படையின் போர்த்திறன் மேலும் வலுப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புராஜக்ட் 17 ஆல்பா (Project 17A) திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட ஏழாவது மற்றும் இறுதி போர்க்கப்பல் இதுவாகும். ஒடிஷாவின் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற மகேந்திரகிரி சிகரம் நினைவாக இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கப்பல் 489 அடி நீளம், 58 அடி அகலம் கொண்டது.
மணிக்கு அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ‘ஸ்டெல்த்’ வடிவமைப்பு கப்பல், வான்வழி தாக்குதல்கள், கடல் மேற்பரப்பு சவால்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ. வரை தாக்கும் பிரம்மோஸ் திறன், நீண்டதூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள், முன்பகுதி பீரங்கி, ராக்கெட் லாஞ்சர்கள், ஹெலிகாப்டர் இயக்க வசதி மற்றும் நவீன தகவல் தொடர்பு சென்சார்கள் இதில் உள்ளன. மேலும் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல்-மீட்பு மற்றும் பேரிடர் கால மனிதநேய உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும்; எரிபொருள் நிரப்பாமல் 10,200 கி.மீ. வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியும்; ஒரே நேரத்தில் 226 பேர் தங்கி பணியாற்ற முடியும்.





