ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஓமன் அருகே சென்ற சைப்ரஸ் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பிறகு கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

கப்பலில் 11 இந்தியர்கள் இருந்தனர். தீ பரவியதைத் தொடர்ந்து அவர்கள் கடலில் குதித்த நிலையில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; ஒருவர் இன்னும் மாயமாக உள்ளார். அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது. அந்தப் பகுதியில் வர்த்தக கப்பல்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது ஏற்கனவே பதற்றம் நிலவும் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

பதற்றத்தை உடனடியாக தணிக்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் தூதரக முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தை வழியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியது. வர்த்தக கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; கப்பல்கள் தடையின்றி சென்று வரவும், சர்வதேச சட்டங்கள் மதிக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.