கேரளாவில் 1990ஆம் ஆண்டு அரசு பஸ்சில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்த வழக்கில், 36 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் தற்போது 71 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூருவில் கிடைத்த ஒரு திடீர் தடயமே இந்த பழைய வழக்கை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

போலீசார் கூறுகையில், திருவம்பாடி–கூம்பரா இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திருவம்பாடி வந்தபோது ஒருவர் பஸ்சில் ஏறி, துப்பாக்கி காட்டி அன்றைய வசூல் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் குற்றத்தில் தொடர்புடையவர் ‘ஜோஸ்’ என அடையாளம் காணப்பட்டு, அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் பல ஆண்டுகளாக போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

இந்நிலையில் ஜூலை 8 அன்று மைசூரு நகரின் நரசிம்மராஜா பகுதியில் சிவக்குமார் மற்றும் அவரது மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்குச் சென்றனர். அங்கு நடந்த சோதனையில் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; துப்பாக்கிக்கான உரிய ஆவணங்களை சிவக்குமார் வழங்க முடியவில்லை.

இதையடுத்து மைசூரு போலீசார் துப்பாக்கி தொடர்பான விவரங்களை கேரள போலீசாருடன் பகிர்ந்தபோது முக்கிய இணைப்பு கிடைத்தது. பின்னணி விசாரணையில், சிவக்குமார் என்பவர் 1990 பஸ் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட ஜோஸ் என்பதே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 1990க்குப் பிறகு மைசூருவுக்கு வந்து பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி வாழ்ந்ததாகவும், திருவம்பாடி போலீசார் மைசூரு சென்று அவரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.