பா.ஜ., தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு வியூக அமைப்பாளராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், இப்போது பீஹாரில் நேரடியாக தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளார். அவர் 2024ல் ‘ஜன் சுராஜ்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபைத் தேர்தலில் ஜன் சுராஜ் 243 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. கட்சி 3.3% வாக்குகள் மட்டுமே பெற்றதுடன், 236 தொகுதிகளில் டிபாசிட் இழந்தது; அத்தேர்தலில் கிஷோர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், பாட்னா நகரின் பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். பா.ஜ. எம்.எல்.ஏ. நிதின் நபின் கட்சியின் தேசிய தலைவராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனதால் இந்தத் தொகுதி காலியாகி, ஜூலை 30ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பா.ஜ. முதலில் அறிவித்த வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றது கவனம் பெற்றுள்ளது. பின்னர் வேறு ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், இதை கட்சிக்குள் உள்ள பிரச்னைகளின் அறிகுறி என கிஷோர் கூறி, தன் வெற்றி உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் தேர்தல் முடிவுகளை ஜாதி அடிப்படையிலான வாக்குகள் தீர்மானிக்கும் சூழலில், இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளதாக கூறப்படும் காயஸ்த் சமூகத்தைச் சேர்ந்தவர் பா.ஜ. வேட்பாளர். கிஷோர் அந்தப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால், மக்கள் அவரை ஆதரிக்கிறார்களா என்பது ஆகஸ்ட் 3ல் முடிவு அறிவிக்கும்போது தெரியவரும்.





