இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக விளங்கிய எஸ். ஜானகி, கதாபாத்திரத்தின் வயதுக்கும் மனநிலைக்கும் ஏற்ப குரலின் தொனியையும் தன்மையையும் மாற்றி பாடும் அபார திறமைக்காகப் போற்றப்பட்டவர். சில நேரங்களில் ஆண் குரலிலும் பாடி அனைவரையும் அசர வைத்ததாக ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள்.

ஒரு இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகி பி. சுசீலாவுடன் இணைந்து “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்ற பாடலை ஜானகி பாடினார். பெண் குரல் பகுதிகளை சுசீலா பாடிய நிலையில், யாரும் எதிர்பாராத தருணத்தில் ஜானகி “இப்போது நான் அவரது லவ்வராக மாறப் போகிறேன்” என்று கூறி ஆண் குரலில் பாடத் தொடங்கினார்.

இந்த திடீர் மாற்றம் அரங்கில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியதாகவும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கலைஞர்களும் பார்வையாளர்களும் அசந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற இன்னொரு நிகழ்ச்சியையும் பாடகி சின்மயி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஜானகி பாடிக் கொண்டிருப்பது தெரியாமல், ஆண் குரல் பாடுவதாக நினைத்து “யார் அந்த கலைஞர்?” என்று ரசித்துக் கேட்டதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.