சென்னை: மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 ‘செஸ்’ வரி வசூலிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான விதிமுறை/சட்டத் திருத்தங்களை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமாரின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

தற்போது நடைமுறையில் உள்ள காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் கூறியது. பாட்டிலுக்கு தனியாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டிலை திருப்பித் தரும்போது அதையே வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கும் முறைக்கு பதிலாக, அந்த ரூ.10 தொகையை மதுபானத்தின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (MRP) உடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

MRP உயர்த்த அனுமதி கிடைத்த பின், காலி பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி செய்வது போன்ற பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 செஸ் வரி விதிப்பதற்கான கருத்துருவை வணிக வரித்துறை ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், விதிமுறை திருத்தங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.