தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் இறுதி தண்டனை கிடைக்க நீதிமன்ற நடைமுறைகள் ஆண்டுக்கணக்கில் நீளுவதால், நடவடிக்கையின் பலன் முழுமையாக கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை 2024–25 புள்ளிவிபரங்களின்படி, அந்த ஆண்டில் 199 டிராப் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளை சேர்த்து மொத்தமாக 681 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய வழக்குகள் பதிவு செய்யும் வேகத்திற்கு இணையாக பழைய வழக்குகள் நீதிமன்றங்களில் முடிவடையாததால் நிலுவை எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் முழுவதும் 1,385 லஞ்ச வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இதில் 3,380 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மேலாக 624 தீர்ப்பாய விசாரணைகள் (1,527 பேர்) மற்றும் 724 துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் (5,430 அரசு அதிகாரிகள்) இன்னும் நிறைவடையாமல் உள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு அலுவலர்கள்/அதிகாரிகள் தொடர்பான வழக்குகளில் ஆவணங்களை சேகரித்து அந்தந்த துறைகளில் ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். சாட்சிகள் அடிக்கடி ஆஜராகாதது, அதிகாரிகள் இடமாற்றம், சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது போன்ற காரணங்களாலும் விசாரணை நீள்கிறது என்றார்.

கோவை மாவட்ட வழக்கறிஞர் முகமதுசமீர், நீதிமன்றங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக பலர் செய்ய வேண்டிய பணியை ஒருவர் செய்யும் நிலை இருப்பதாக கூறினார். அரசுத்துறை சார்ந்த வழக்குகளில் தேவையற்ற தாமதம் மற்றும் ஆஜராகாமல் தவிர்ப்பதும் நடப்பதாகவும், வழக்கின் தன்மைக்கு ஏற்ப காலக்கெடு நிர்ணயித்து கடைப்பிடிக்க வேண்டும்; காலக்கெடு மீறினால் காரணத்தை பதிவு செய்யும் நடைமுறை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.