எரிவாயு சிலிண்டர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மாநிலம் முழுவதும் பல உணவகங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) தனது தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் ரூ.99க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

TTDC இயக்குநர் ஜெயசீலன் கூறுகையில், ரூ.99 உணவில் 450–500 கிராம் சிக்கன் பிரியாணி, கத்தரிக்காய் கிரேவி மற்றும் தயிர்-வெங்காயம் சேர்த்து வழங்கப்படும் என்றார். TTDC உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதோடு, மலிவான விலையில் தரமான உணவை வழங்குவதே திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக சில TTDC உணவகங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொருத்து, இதை மற்ற உணவுப் பொருட்களுக்கும் விரிவுபடுத்த திட்டமுள்ளதாகவும் கூறினார்.

மேலும் திறமையான கொள்முதல், ஒரே மாதிரியான சமையல் குறிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமையலறை செயல்பாடுகள் மூலம் தரத்தைப் பேணியபடி செலவுகளை நிர்வகித்து வருவதாகவும் அவர் விளக்கினார்.

முதற்கட்டமாக ஓசூர், ராணிப்பேட்டை, ஊட்டி, கோவை, கொடைக்கானல், சிதம்பரம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள 21 TTDC உணவகங்களில் ரூ.99 பிரியாணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 4,200 பிளேட் பிரியாணி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.