வியட்நாமின் தெற்கு பு கியூக் தீவு அருகே கடலில் கவிழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், அந்தப் படகை இயக்கிய கேப்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 11 அன்று நடந்த இந்த விபத்தில், 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், வியட்நாமைச் சேர்ந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் 15 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்; மீதமுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தெற்கு அன் ஜியாங் மாகாண போலீசார், 57 வயதான கேப்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, உயிர் தப்பிய இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் பு கியூக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த 15 பேரின் உடல்கள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குப் பிறகு, தீவுகளுக்கு இடையேயான அதிவேகப் படகு சேவைகளை பல சுற்றுலா நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.





