பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு மாநாட்டில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, 2031ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.

இந்த மாநாடு ஒரு மாதமாக வீடு வீடாகச் சென்று செய்த விழிப்புணர்வு பணியின் தொடர்ச்சியாக நடந்ததாக கூறிய அவர், ஜூன் 5 அன்று தொடங்கப்பட்ட இந்த அமைப்பை அரசியல் இயக்கமாகவும் மக்கள் புரட்சியாகவும் விளக்கினார். கீழ்மட்டத்திலிருந்து தலைமை உருவாக்கி, சமூகப் பிரச்னைகளுக்கு மக்கள் பங்கேற்று தீர்வு காணும் நோக்கத்துடன் அமைப்பு தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமைப்பு தொடங்கி 39 நாளில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், யாரையும் அழைத்து சேர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது குடும்பக் கட்சி அல்ல; மக்களுக்கே சொந்தமான அமைப்பு என கூறிய அவர், 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கு மக்கள் தன்னார்வமாக இணையும் போது தான் அர்த்தமுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த மாநாடு தூத்துக்குடியில் நடைபெறும் என அறிவித்த அவர், அடுத்த மாதத்தை ‘சுற்றுச்சூழல் மாதம்’ எனக் கொண்டு 50 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், 2,000க்கும் மேற்பட்ட ஏரிகள் சுத்தம் செய்தல், நதி நீர் சுத்தம் செய்வது போன்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆறு முக்கிய பிரச்னைகள் குறித்து தன்னார்வலர்கள் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், செப்டம்பரில் பெண்கள் பாதுகாப்பு, அதன் பின்னர் குழந்தைகள் நலன் போன்ற தலைப்புகள் இருக்கும் என்றும் கூறினார்.

‘ஆரோக்கிய அரசியல்’ என்பதே நோக்கம் என வலியுறுத்திய அண்ணாமலை, இந்த மாநாடு மற்றவர்களை திட்டுவதற்காக அல்ல என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதை மதிக்க வேண்டும் என்றும், புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தடுமாறலாம்; அவர்களை ஊக்குவித்து முன்னேற்ற வேண்டும் என்றும் கூறினார். அமைப்பு ஜாதி, மதம் தாண்டி நிற்கும் என்றும், சமூகநீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி, பண்பாட்டு நீட்சி, ஆட்சியில் மாற்றம் ஆகியவை இலக்குகள் என்றும் அவர் கூறினார்.