அதிக அளவு ஆல்கஹால் கலந்த மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எழுந்த கவலைகளை தொடர்ந்து, அவற்றின் விற்பனைக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் “ஷெட்யூல் கே” பிரிவின் கீழ், 12% வரை ஆல்கஹால் உள்ள மருந்துகளை சில தளர்வுகளுடன் விற்பனை செய்ய அனுமதி இருந்தது. இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சில மருந்துகள் அதிக அளவு எத்தில் ஆல்கஹால் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மருந்துகளில் ஆல்கஹால் பயன்பாடு மற்றும் விற்பனை முறைகளில் கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
புதிய விதிகளின்படி, 12%க்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை தன்னிச்சையாக வாங்கவும் விற்கவும் முடியாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
இந்த விதிமுறைகள் 2027 ஜனவரி முதல் அமலுக்கு வரும். இந்த கட்டுப்பாடுகள் மூலம் இவ்வகை மருந்துகளின் விற்பனை மற்றும் தவறான பயன்பாடு தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.





