WDMMA வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த விமானப்படைகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது ஆண்டாக 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
இந்த மதிப்பீட்டில் 103 நாடுகளில் உள்ள 129 வான்வழிச் சேவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், உலகம் முழுவதும் 48,000க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கை, தொழில்நுட்பத் தரம், தளவாட வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறன் போன்ற அடிப்படைகளில் தரவரிசை தயாரிக்கப்பட்டது.
பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா 7வது இடத்திலும், பாகிஸ்தான் 18வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய விமானப்படையில் மொத்தம் 1,716 விமானங்கள் உள்ளன; இதில் 542 போர் மற்றும் தாக்குதல் விமானங்கள் அடங்கும். சீனாவிடம் 3,733 விமானங்களுடன் பெரிய படை இருந்தாலும், தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியா வலுவாக இருப்பதாக பட்டியல் குறிப்பிடுகிறது.
மேலும் இந்திய விமானப்படையில் 498 ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் 222 எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 111 ஹெச்ஏஎல் துருவ் மற்றும் ருத்ரா வகைகள் அடங்கும். இதற்கு கூடுதலாக 282 போக்குவரத்து விமானங்கள், 374 பயிற்சி விமானங்கள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை, உளவுத் தகவல் சேகரிப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பு வசதிகள் கொண்ட 20 சிறப்புப் பணி விமானங்களும் செயல்பாட்டில் உள்ளன.





