புதுடில்லி: இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத்தில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அந்த செய்தி “பொய், ஆதாரமற்றது, தவறாக வழிநடத்தக்கூடியது” எனக் கூறினார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், ஒப்பந்தத்தின் பெரும்பகுதி ஏற்கெனவே முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், டில்லியில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் நடந்த சமீபத்திய சந்திப்பு “அற்புதமானதாக” இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் சமமான, இருதரப்புக்கும் பயன் தரும் ஒப்பந்தம் உருவாக வேண்டும் என்பதில் இரு அரசுகளும் உறுதியாக உள்ளன; தொழில், விவசாயம் மற்றும் நுகர்வோருக்கு பலன் கிடைக்கும் வகையில் பேச்சுகள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வாலும் பேச்சுவார்த்தையில் எந்தத் தடையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.





