உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. இதன் பின்னணியில், ஈரான் மீது அமெரிக்கா அடுத்த கட்ட தாக்குதல்களை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டதால் பதற்றம் மேலும் உயர்ந்துள்ளது.

ஈரான்–அமெரிக்கா இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டாலும், இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்ததாக செய்தி தெரிவிக்கிறது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்ததுடன், அமைதி பேச்சை தொடர்வதாகவும் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக இரு தரப்பும் பரஸ்பரம் தாக்கி வருகின்றன. அமெரிக்கா ஈரான் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான “பொருத்தமான வழிகள்” குறித்து விவாதித்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்; மேலும் பேச்சை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாக ஓமன் கூறியது.

இந்த பேச்சுகளுக்குப் பிறகு, ஜலசந்தி மூடப்படுவதாக IRGC அறிவித்தது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானை நோக்கி 1,000 ஏவுகணைகள் குறிவைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியதாகவும், தனது தந்தை கமேனி கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவோம் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அறிக்கை வெளியிட்டதாகவும் செய்தி தெரிவிக்கிறது.