கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர், பட்டா மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.2,500 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கரீம்ஷா தக்காவை சேர்ந்த குதாவன்ஷரீப் (49) என்பவர், தமக்கு சொந்தமான வீட்டுமனை விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா மாற்றம் செய்ய சில தினங்களுக்கு முன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்காக, எறையூர் சேவியர் மகன் ஆரோன் (31) ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும், இதுகுறித்து குதாவன்ஷரீப் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தை லஞ்சமாக பெற்றபோது ஆரோன் கையும் களவுமாக பிடிபட்டு, இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.