பெங்களூரு: கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், மறைமுக ஆய்வுக்காக அரசு பஸ்சில் பயணித்த போது, சில்லரை பிரச்னையால் கண்டக்டர் அவரை பஸ்சிலிருந்து இறங்கச் சொன்ன சம்பவம் நடந்துள்ளது.

பயணிகளுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுகிறதா, டிரைவர்–கண்டக்டர் நடத்தை எப்படி உள்ளது என்பதைக் காண, அமைச்சர் சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து பல இடங்களில் அரசு பஸ்களில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. பூபசந்தரா–ஹெப்பால் வழித்தடத்தில் அவர் இரண்டு டிக்கெட் கேட்டுப் ₹100 கொடுத்தார்.

அப்போது ₹12 சில்லரை தருமாறு கண்டக்டர் கேட்ட நிலையில், தன்னிடம் சில்லரை இல்லை என அமைச்சர் கூறியதால், அவரை கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறியதாக செய்தி கூறுகிறது.

இதையடுத்து அமைச்சர் முகக்கவசத்தை அகற்றி கண்டக்டரை கண்டித்ததுடன், பயணம் தொடங்கும் முன்பே தேவையான சில்லரையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் ஜெயமஹால், ஹென்னூர் டிப்போ உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வை தொடர்ந்த அவர், பயணிகளிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படும் கண்டக்டர்களை எச்சரித்து, பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். பணியில் குறைபாடு இருந்த சில அதிகாரிகளும், நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படும் ஒரு டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.