திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையில் கிடைத்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த இரண்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சத்யா (45), சசிகலா (44) ஆகியோர் நேற்று சமுத்திராபட்டிக்கு கட்டிட வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சமுத்திராபட்டி குளக்கரை பகுதியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு பர்ஸை அவர்கள் கண்டெடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது அதில் 5¼ பவுன் தங்க நகை இருந்தது.
உடனடியாக அவர்கள் நத்தம் காவல் நிலையத்துக்குச் சென்று நகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திண்டுக்கல் தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (30) மற்றும் சினேகா (23) ஆகியோர் சேக்கிபட்டியில் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு பைக்கில் சென்றபோது தவறவிட்டது தெரியவந்தது.
உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு போலீசார் நகையை அந்த தம்பதியினரிடம் திருப்பி வழங்கினர். நேர்மையுடன் நகையை ஒப்படைத்த சத்யா, சசிகலா ஆகியோரை நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ. அபினேஷ் உள்ளிட்ட போலீசாரும், நகையை பெற்ற தம்பதியினரும் பாராட்டினர்.





