புதுடில்லி: பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் பதவி நீக்கம் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை ஆய்வு செய்த பார்லிமென்ட் கூட்டுக்குழு, முக்கிய திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. பதவி நீக்கம் நிரந்தரமாக அல்ல; தற்காலிகமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அதன் மையக் கருத்தாக உள்ளது.
மத்திய அரசு 2025 ஆகஸ்டில் லோக்சபாவில் தாக்கல் செய்த 130வது அரசியல் சாசன திருத்த மசோதாவில், குற்ற வழக்கில் தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தால், 31வது நாளில் பதவி தானாகவே பறிபோகும் வகையில் விதி முன்மொழியப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கும் நோக்கில் மசோதா கொண்டு வரப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன், மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவிலிருந்தும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வெளியேறின.
கூட்டுக்குழு பரிந்துரைகளின்படி, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களை சட்ட நடைமுறைகள் முடியும் முன் நிரந்தரமாக பதவி நீக்கக் கூடாது; விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் மட்டுமே அமல்படுத்தலாம். மேலும், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களையே “தீவிர குற்றங்கள்” என வரையறுத்து, அதற்கென தனி குற்றப்பட்டியலை சட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணை நடைபெறாவிட்டாலோ, தற்காலிக பணி நீக்கம் தானாகவே ரத்தாகி அவர் மீண்டும் பழைய பதவியை பெற வழிவகை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரதமர், முதல்வர் போன்ற உயர் அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் மீதான வழக்குகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விரைவு அல்லது சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் அதிவேகமாக முடிக்கவும் குழு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றால், மசோதாவில் திருத்தங்கள் செய்து மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





