பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு நடத்திய மாநாட்டில், போதைப் பழக்கத்தையும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத விற்பனையையும் கட்டுப்படுத்தும் நோக்கில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தை ‘ஒயிட் பேண்ட்’ மாதமாகக் கடைப்பிடித்து, போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கள்ளச்சந்தை போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், மாவட்டம்தோறும் போதைத் தடுப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்பதும் தீர்மானங்களில் இடம்பெற்றது. புதிய ‘மனமகிழ் மன்ற’ பார்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது என்றும் மாநாடு கோரியது.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகத்தை தேசிய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், பங்கேற்பாளர்கள் போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மொபைல் செயலியை அண்ணாமலை வெளியிட்டார். மாநாடு தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பாகவும் வெளியிடப்பட்டது.





