ஹைதராபாத்: இந்திய விமானப்படை குரூப் கேப்டன் மற்றும் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அதிகமான இந்தியர்கள் விண்வெளியை ஆராய ஒரு வாய்ப்பைப் பெறுவதைப் பார்க்கவேண்டும் என்பதே தனது அடுத்த பெரிய கனவு என தெரிவித்தார்.
தனது The Second Orbit புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என குறிப்பிடப்பட்டார். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது, “இந்தப் பூமிதான் நமது வீடு” என்ற உணர்வே முதலில் தோன்றும்; எல்லைகளோ பிராந்தியங்களோ தென்படாது என்றும் அவர் கூறினார்.
இன்றைய குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் உள்ளன; அவர்கள் விரும்பும் தொழில்களைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாகச் செயல்படலாம். அதற்காக ஒருபோதும் விடாமல் தங்கள் திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புத்தகத்தின் பெயர் குறித்து விளக்கமளித்த சுக்லா, தன் பணியை பிரதிநிதித்துவப்படுத்த The Second Orbit என்ற தலைப்பு பொருத்தமாகத் தோன்றியதாகவும், தனது விண்வெளிப் பயண அனுபவத்தை அனைவருடனும் பகிர்வதே நோக்கம் என்றும் கூறினார். இது வகுப்பறையிலிருந்து விண்வெளி வரை செல்லும் அனைவருக்குமான கதை; இதுபோன்ற அனுபவங்கள் குழந்தைகளுக்கும் நிகழலாம் என்பதைச் சொல்லும் முயற்சியாகவும் இதை அவர் குறிப்பிட்டார்.
புத்தகம் எழுதுவது சவாலாக இருந்ததாகவும், எழுதும் காலம் முழுவதும் தனது விண்வெளிப் பயணத்தை மீண்டும் அனுபவித்தது போல இருந்ததாகவும் சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.





