ஐரோப்பாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கடும் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 4.4 கோடி மக்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராக்கி மலைத் தொடர் மற்றும் வடக்கு சமவெளி பகுதிகளில் வெப்பநிலை 43°C வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சால்ட் லேக் சிட்டி, மொன்டானா, வடக்கு டகோட்டா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை மீறிய அளவில் கோடை வெப்பம் பதிவாகி வருகிறது.

அதீத வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக கொலராடோ, உட்டா மாநிலங்களில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயணைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு அமெரிக்க மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது; மியாமி நகரிலும் கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த வாரம் நியூயார்க், பிலடெல்பியா போன்ற கிழக்கு நகரங்களில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கிய நிலையில், தற்போது மற்றொரு வெப்ப அலை பரவலாக தாக்கியுள்ளது.

நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்கள் பயன்பாட்டால் உருவாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் பருவநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தி, உலகம் முழுவதும் வெப்ப அலைகள் நீடிக்கக் காரணமாகின்றன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.