சென்னை பெரம்பூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பெரம்பூர் எம்எல்ஏவாக தொடர்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியான பின், தொகுதிக்கு அவர் சென்றது இது முதல் முறை என தெரிவிக்கப்பட்டது.

சர்மாநகரில் அமைந்துள்ள அலுவலகத்தை அவர் பார்வையிட்டபோது, அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும் ரேஷன் கார்டு, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், தொகுதி சார்ந்த பிரச்னைகளை புகார்களாக பதிவு செய்ய “மக்கள் சேவை” செயலியையும் அறிமுகம் செய்தார்.

இதன் பின்னர் வியாசர்பாடி மெட்ரோவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை பார்வையிடவும், எம்.கே.பி.நகரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்து ரேஷன் அட்டைகள் மற்றும் பொருட்களை வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. முதல்வர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர்.