அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், தவெகவில் இணைந்தது யாருடைய அழுத்தத்தினாலும் அல்ல; தன் சுய முடிவின்பேரிலேயே என தெரிவித்துள்ளார்.

தவெக அரசு “குதிரை பேரம்” நடத்துவதாகக் கூறி, கவர்னர் மாளிகை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக புகார் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், முதலமைச்சர் மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக வைகோ பேசியதை மேற்கோள் காட்டியதுடன், தவெகவினர் தன்னை அணுகியதாக விஜயபாஸ்கர் முன்பு கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாருக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், தன் பேட்டி கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறினார். மகாபலிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தவெகவில் இணைந்தபோது ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், தவெகவிலிருந்து யாரும் தங்களை அழைக்கவோ அழுத்தம் கொடுக்கவோ இல்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் குழுக்களாக தவெகவில் இணைந்ததாக அவர் கூறினார். கரூரில் உள்ள தங்கள் நிர்வாகிகளும் தவெகவிற்கு செல்லலாம் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கரூர் தொகுதி நிர்வாகிகளுடன் 11 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, பெரும்பாலானோர் இணைப்பு முடிவை ஆதரித்ததாக கூறினார். பிறர் தெரிவித்த கருத்துகளையே தாம் பேட்டியில் கூறியதாகவும், தானும் நிர்வாகிகளும் சுயமாக எடுத்த முடிவே இது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.